மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு:-
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்ததால் தமிழகம் முழுவதும் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜமால் முகமது யூனூஸ் மற்றும் காங்கிரஸ் எம்.பி., ஆர்.சுதாவுக்கு திமுகவினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு காங். கட்சி சார்பில் ஆளுநரைக் கண்டித்து மாவட்ட தலைவர் பானுசேகர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த நிலையில், அங்கு வந்த திமுகவினர், தவெகவுக்கு ஆதரவு அளித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரை தாக்கி விரட்டியடித்துடன், காங்கிரஸ் கொடியையும் கால்களால் மிதித்து சேதப்படுத்தினர். இதில், காயமடைந்த காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜா (எ) ராஜன் என்பவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து திமுக நிர்வாகிகள் மருது (எ) மருதமுத்து (39), வின்சன்ட் (53), ரகு (56), ஜெயச்சந்திரன் (51) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் காவல் நிலைய பிணையில் விடுதலை செய்தனர்.
