தவெக தலைவர் விஜய்க்கு ஜேசிபி மூலம் மாலை – மாவட்ட செயலாளர் உட்பட 4 பேருக்கு வழக்கு !

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திருவாரூரில் அவருக்கு ஜேசிபி மூலம் மாலை அணிவித்த சம்பவத்துக்காக, மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்ட நான்கு பேர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, விஜய் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முதல் தனது முதல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கி சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த சுற்றுப்பயணத்தில், முதல் கட்டமாக திருச்சி மற்றும் அரியலூர் பகுதிகளில் அவர் பரப்புரையை நிறைவு செய்திருந்தார்.

இந்த கூட்டங்களில், தவெக தொண்டர்கள் அனுமதியின்றி மரங்கள், மின்கம்பங்கள் மீது ஏறுவது மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, உயர்நீதிமன்றம் கட்சித் தலைவரே தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு உள்ளவர் என்றும், சேதம் ஏற்படுத்தப்பட்டால் தவெகதான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இதனிடையே, செப்டம்பர் 20ஆம் தேதி விஜய் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பரப்புரையில் பங்கேற்றார். அப்போது, சாலை மார்க்கமாக பயணித்த விஜய்க்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் அனுமதி இல்லாமல் நடைபெற்றதோடு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து, திருவாரூர் மாவட்டச் செயலாளர் மதன் உட்பட நான்கு பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன், நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பரப்புரையில் தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தியதாகவும் தவெகவினர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version