அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2022 ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, பொதுக்குழு தீர்மானங்களையும் பொதுச்செயலாளர் தேர்வையும் சுட்டிக்காட்டி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி ஈபிஎஸ் மனு தாக்கல் செய்தபோதும், அதை உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி முன்னிலையில், ஈபிஎஸ் தரப்பில் — சூரியமூர்த்தி 2018ம் ஆண்டு முதலே அதிமுகவில் உறுப்பினராக இல்லை. மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டவர் என்பதால் கட்சி விவகாரங்களில் அவர் வழக்கு தொடர முடியாது என வாதிடப்பட்டது.
இதற்கு சூரியமூர்த்தி தரப்பில் — கட்சி விதிகளின்படி அவர் இன்னும் உறுப்பினராகவே உள்ளார். எம்.ஜி.ஆர் விருப்பப்படி, பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அதனை மாற்றி விதி திருத்தம் செய்தது செல்லாது என வாதிடப்பட்டது.
இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று தீர்ப்பளித்தார். அதன்படி, ஈபிஎஸ் தரப்பின் வாதங்களை ஏற்று, உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்தார். மேலும், சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டார்.

















