திருச்சி : திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் தனது காரில் நண்பர்கள், உறவினர்களுடன் சென்னைக்கு புறப்பட்டார். அவருடன் ஆலங்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார், அவரது மனைவி யசோதா, ஒன்றரை வயது மகள் அனோனியா, நண்பர் விஜயபாபு ஆகியோர் பயணித்தனர்.
நள்ளிரவு 2 மணி அளவில் சிறுகனூர் அருகே சென்றபோது, அங்கு பழுதாக நின்ற அரசு பஸ்சின் பின்னால் ஜோசப் ஓட்டி வந்த கார் அதிவேகமாக மோதியது. மிகுந்த சேதம் ஏற்பட்ட காரில் சிக்கிய பயணிகள் கடுமையாக காயமடைந்தனர்.
இவ்விபத்தில் யசோதா, அவரது குழந்தை அனோனியா, விஜயபாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் டிரைவர் ஜோசப் மற்றும் செல்வகுமாரை சிறுகனூர் போலீசார் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து குறித்து டிஎஸ்பி தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் எச்சரிக்கை சிக்னல் வைக்கப்படாததால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.