டெல்லி :
டெல்லி செங்கோட்டை (லால் கிலா) மெட்ரோ நிலையம் அருகே கார் ஒன்று திடீரென வெடித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பில் 8 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் இன்று மாலை 6.55 மணியளவில் லால் கிலா மெட்ரோ நுழைவாயில் எண் 1 அருகே நடந்தது. அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்ததில், அருகில் இருந்த ஐந்து முதல் ஆறு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் கடும் தீ பரவி பல கடைகள் சேதமடைந்தன. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வெடிப்பின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தெருவிளக்குகள் அணைந்தன மற்றும் பகுதி முழுவதும் புகை மூட்டம் காணப்பட்டது. பலர் தீக்காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனினும், இது பயங்கரவாத தாக்குதலா என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, அந்த பகுதி முழுவதும் காவல் துறை வலுவான பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, வெடிப்புக்கான மூலக் காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கியமாக, இன்று காலை ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சோதனையில் ஒரு மருத்துவரின் வீட்டிலிருந்து 2,900 கிலோ கிராம் அளவிலான வெடிப்பொருள் தயாரிப்பு மூலப்பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அவர் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையவர் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கும் டெல்லி கார் வெடிப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
