புதுடெல்லி : நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் மத்திய அரசு பொறுப்பெடுக்கவில்லை எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி லோக்சபாவில் தீவிரமாக விமர்சித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் மீது கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதில் வரலாற்று பாடம் இருந்தது என்றாலும், தாக்குதல் நடந்த இடத்தில் ஏன் பாதுகாப்புப் படை இருந்ததில்லை என்ற அடிப்படை கேள்விக்கு பதில் தரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். “மக்களின் பாதுகாப்பு பிரதமர், உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் பொறுப்பு அல்லவா? நடந்ததுக்குப் பதிலளிக்காமல், கேள்விகளிலிருந்து தப்பிக்கவே அரசு முயற்சி செய்கிறது,” என்றார்.
2020 முதல் 2025 ஏப்ரல் வரை செயல்பட்ட டிஆர்எப் அமைப்பு 25 பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானது என்றும், 2023ல் மத்திய அரசு அதை பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததையும் பிரியங்கா நினைவுபடுத்தினார்.
“தாக்குதல் நடந்த பஹல்காமில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் இல்லையெனக் கேட்கிறோம். இதற்காக எந்தப் பொறுப்பும் யாரும் ஏற்கவில்லை. ஐபி தலைவர் ராஜினாமா செய்தாரா? உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்தாரா?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
மணிப்பூர், டில்லி கலவரம், பஹல்காம் தாக்குதல் – இவை அனைத்திலும் உள்துறை அமைச்சர் பதவியில் தொடர்வது கேள்விக்குறி என தெரிவித்தார். “நீங்கள் எத்தனை நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது முக்கியமல்ல, உண்மையை மறைக்க முடியாது. மக்கள் அனைத்தையும் புரிந்துகொள்கிறார்கள். பாதுகாப்பு ஒரு அரசியல் விளம்பரமாக மட்டுமே மாற்றப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது,” என்றார்.