“மன்னிக்க முடியாது” – உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம் : கேரள நர்சுக்கு மரண தண்டனை உறுதியா ?

ஏமன் : தலால் அபு மஹதி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, ஏமன் அரசு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையைத் தவிர்க்க இந்திய அரசு மற்றும் மனிதாபிமான அமைப்புகள் பலத்த முயற்சிகளை எடுத்தன. இருப்பினும், அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், ஜூலை 16 அன்று அந்தத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

இந்த சூழலில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சுன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் உத்தரவின் பேரில், ஏமனில் சூஃபி மதத்தினை சேர்ந்த ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ் தலைமையில் தலால் அபு மஹதியின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் விளைவாக, நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக, ‘இரத்தப் பணம்’ வழங்கும் வாய்ப்பு பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஷரியா சட்டத்தின் கீழ், கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் பண இழப்பீட்டை (இரத்தப் பணம்) வழங்கி, குற்றவாளிக்கு மன்னிப்பு பெற முடியும். இந்த நிதியுதவியை, கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஏ. யூசுப் அலி வழங்க தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தலால் அபு மஹதியின் சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹதி, “நாங்கள் எந்தச் சமரசத்தையும் ஏற்கப்போவதில்லை. மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். பணம் வாங்க விரும்புவதாக நிமிஷாவின் குடும்பம் கூறுவது வெறித்தனமானது” என தெரிவித்துள்ளார்.

இதனால், நிமிஷாவுக்காக நடக்கின்ற முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார். NDTV-க்கு அளித்த பேட்டியில், “இந்த வழக்கில் பணம் பற்றி பேசப்படுவதால், மஹதியின் குடும்பம் கோபத்தில் உள்ளனர். உண்மையில், இது ஒரு கருணை மனப்பான்மையில் மன்னிப்பு பெறும் முயற்சி மட்டுமே. அவர்கள் பணத்தில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் இப்போது நாங்கள் மீண்டும் நட்பு பாலங்களை கட்டவேண்டும். ஆனால் எவ்வளவு நேரம் கிடைக்கும் என்பது தெரியவில்லை” என கவலை தெரிவித்தார்.

இந்த முறைமையால், நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு கிடைக்குமா அல்லது மரண தண்டனை உறுதியாக நிறைவேற்றப்படுமா என்பதற்கான பதில், தலால் அபு மஹதியின் குடும்பத்தின் இறுதி முடிவைப் பொறுத்தது.

Exit mobile version