பென்சில்வேனியா பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிரடி ஆய்வு முடிவுகள்
எகிப்து மன்னன் துட்டன்காமனின் கல்லறையில் இருந்து புற்றுநோய்க்கு புதிய மருந்து உருவாக்கும் வழியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாம் என அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த மர்மமான, அதே நேரத்தில் சுவாரஸ்யமான ஆராய்ச்சி உலகளாவிய மருத்துவத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூவாயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆண்ட துட்டன்காமனின் தங்கக் கல்லறை 1920ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் கல்லறையை திறந்த தொல்லியல் அறிஞர்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இதுவே “ஃபாரோவின் சாபம்” என அறியப்பட்டது. ஆனால், பின்னர் அதில் இருந்த அஸ்பெர்கிலஸ் ஃபிளேவஸ் (Aspergillus flavus) என்ற பூஞ்சைத் தாக்குதலால் அவர்கள் உயிரிழந்தனர் என்பதைக் கண்டுபிடித்தனர்.
தற்போது அதே பூஞ்சை பற்றிய மேலான ஆய்வில், அதில் இருந்து அஸ்பெரிஜிமைசின்ஸ் (asperigimycins) எனப்படும் நான்கு முக்கிய மூலக்கூறுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மூலக்கூறுகள், லுகேமியா (leukemia) போன்ற இரத்தப் புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் செல்களை தடுக்கவல்லதென்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த மூலக்கூறுகள் லிபிட்ஸ் (lipids) எனும் கொழுப்பு அலகுகளுடன் இணையும்போது, இன்சுலின் போன்று செயல்பட்டு, தற்போது பயன்படுத்தப்படும் புற்றுநோய் மருந்துகளுக்கு இணையாக செயல் தாக்கம் காணப்பட்டதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக, இந்த மருந்து விலங்குகள் மீது சோதனையிடப்பட்ட நிலையில், குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் ஏதும் இல்லையெனவும், எதிர்காலத்தில் மனிதர்களின் புற்றுநோய் சிகிச்சையில் இது ஒரு புதிய தரப்பாடலை உருவாக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.