‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில், தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஆனால், ஏற்கனவே வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடு பெற்றவர்கள், இந்தத் திட்டத்தின் கீழ் வீடு பெற தகுதியற்றவர்கள் என அரசு ஒரு திருத்த அரசாணையை வெளியிட்டது. இதன் காரணமாக, ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பல எழுத்தாளர்களின் வீடுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த ரத்து உத்தரவை எதிர்த்து முன்னாள் டி.ஜி.பி. திலகவதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், “தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது வாழ்நாள் இறுதி வரை கவுரவப்படுத்தினார். தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்த அரசாணை, கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது” என்று கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில்,
“தமிழகத்தில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர் என்பது துரதிஷ்டவசமானது. எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம்; இதன் முக்கியத்துவத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புரிந்துகொள்வதில்லை. கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்த அனுமதித்தால், அது பெரும் பிரச்சனைகளை உருவாக்கும்” என்று எச்சரித்தார்.
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், “அரசை நடத்துவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான்; அதிகாரிகள் அல்ல” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவிஞர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கு, இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.