மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் தெருநாய்கள் சண்டையிட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் விழுந்ததில் 9 வயது மாணவிகள் இருவர், மாணவிகளின் பெற்றோர் என நான்கு பேருக்கு காயம்; மருத்துவமனையில் சிகிச்சை. நாய் உயிரிழப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை முதலியார் தெருவை சேர்ந்தவர்கள் பாரதிராஜா-சுகன்யா தம்பதியினர். இவர்கள் இருவரும் இன்று காலை நான்காம் வகுப்பு படிக்கும் தங்களது இரண்டு மகள்கள் தைலா, மகாலட்சுமியுடன் இருசக்கர வாகனத்தில் கால்டெக்ஸ் பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது சாலையில் சண்டையிட்டுக் கொண்ட நாய்கள் பாரதிராஜாவின் இருசக்கர வாகனத்தில் வந்து விழுந்து சிக்கியதில் நான்கு பேரும் கீழே விழுந்தனர். இதில் தைலா என்ற சிறுமிக்கு முகத்திலும், முழங்காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. மற்றொரு சிறுமிக்கு கையில் லேசான காயமும் பாரதிராஜா மற்றும் அவரது மனைவி சுகன்யாவிற்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருசக்கர வாகனத்தில் சிக்கிய நாய் உயிரிழந்தது.
மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு தெருக்களில் மாணவர்கள் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு வெறி நாய் 30-க்கு மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில் சாலைகளில் இது போன்ற விபத்துகளை ஏற்படுத்தும் தெருநாய்களையும், சாலையில் நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனத்தில் செல்வோரையும் விரட்டி சென்று அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

















