சென்னை:
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து கருத்து பரிமாறி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஒரு மனிதநேயமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொகுதிப்பருப்பு நிலவரம், அமைப்பு வலிமை, தேர்தல் தயார் போன்றவற்றை நேரடியாக ஆய்வு செய்யும் “உடன்பிறப்பே வா” நிகழ்ச்சியின் போது, ஆலங்குளம் ஒன்றியச் செயலாளர் செல்வகுமார் முதல்வருடன் சந்திப்பு கொண்டார். அந்த நேரத்தில், 1967 முதல் திமுகவில் செயல்பட்டு வரும் தனது தந்தையுடன் ஒரு புகைப்படம் எடுக்க விருப்பம் உள்ளதாகவும் அவர் நிகழ்ச்சிக்கு வரலாமா என்று செல்வகுமார் கேட்டுள்ளார்.
இதற்கு உடனடியாக பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “உங்க அப்பாவுக்கு போன் பண்ணுங்க” என்று கூறி, அவருடைய தந்தையிடம் நேரடியாக செல்போனில் பேசினார். சென்னை வரும்படி அன்புடன் அழைத்த முதல்வரின் இந்த செயலைக் கண்டு, ஒன்றியச் செயலாளர் செல்வகுமார் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காட்சி பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையில், அதிமுகவினருடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்ட சுல்தான் பேட்டை ஒன்றியச் செயலாளர் பி.வி. மகாலிங்கம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஒன்-டு-ஒன் ஆலோசனைக்குப் பிறகு, அவரது பதவியை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















