கொழும்பு :
இலங்கையின் வடமேற்கு பகுதியிலுள்ள புகழ்பெற்ற புத்த மடாலயத்தில் கேபிள் கார் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு இந்தியர் உட்பட 7 துறவிகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் காயமடைந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிகவெரட்டியாவில், கொழும்பிலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த மடாலயத்தில், கேபிள் கார் கவிழ்ந்து விபத்து நேரிட்டது. தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் உயிரிழந்த 7 துறவிகளில், ஒரு இந்தியர், ஒரு ரஷ்யர் மற்றும் ஒரு ருமேனிய நாட்டவர் அடங்குவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
கேபிள் கார் விபத்து நிகழ்ந்த இந்த மடாலயம் தியானங்களுக்கு பெயர் பெற்றது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் தொடர்ந்து வருகை தரும் முக்கிய ஆன்மிக மையமாகவும் இது விளங்குகிறது.