பள்ளிப்பாளையம்: ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்ற தனியார் பஸ், பள்ளிப்பாளையம் அருகே விபத்துக்குள்ளானது.
நேற்று மாலை 4.45 மணியளவில், பஸ் பள்ளிப்பாளையம் அடுத்த கீழ்காலனி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, மழை காரணமாக சாலை வழுக்கும் நிலையில், கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ், மேம்பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. மேலும், 2 பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பஸ் மோதியதால் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பமும் சேதமடைந்தது.
இன்னும் சில அடிகள் பஸ் முன்னே சென்றிருந்தால், பெரிய விபத்து நிகழ்ந்திருக்கும் நிலையில், அதிர்ஷ்டவசமாக தடுப்பு சுவர் மீது மோதியதால் பெரிய அபாயம் தவிர்க்கப்பட்டது.