புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான அரசு வருகைக்காக இன்று டில்லியிலிருந்து புறப்பட்டார்.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் முதலில் ஆப்ரிக்காவின் கானா நாட்டுக்கு செல்கிறார். அங்கு இரண்டு நாள் பயணத்தை முடித்த பின்னர், டிரினிடாட் அண்ட் டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளுக்குச் செல்ல உள்ளார்.
ஜூலை 5ம் தேதி பிரேசிலில் நடைபெற உள்ள 17வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டின் போது, பல நாடுகளின் தலைவர்களுடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
பின்னர், நமீபியா நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இது அவருக்கென ஒரு பெருமைமிகு வாய்ப்பாக கருதப்படுகிறது.
இப்பயணத்தைத் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி கூறியதாவது:
அடுத்த சில நாட்களில் கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். உலகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதும், நமீபியா பார்லிமென்டில் உரையாற்றுவதும் எனக்கு பெரும் மரியாதையாகும்.
ஜூலை 9ம் தேதி பிரதமர் மோடி டில்லிக்கு திரும்புவார்.
