காஞ்சீபுரம் : காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த செந்தில்குமார் – ஜோதிலட்சுமி தம்பதியின் மகள் அனுஷா (18). கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், ஏகனாபுரம் அருகே கண்ணன் தாங்கல் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் கண்ணன் என்ற இளைஞரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இருவரது காதல் விவகாரம் சஞ்சய் கண்ணனின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தபோது, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அனுஷாவின் பெற்றோர்கள், உறவினர்கள் திருமணத்திற்கு சம்மதித்திருந்தனர். இதையடுத்து, சஞ்சய் கண்ணனின் பெற்றோர் “இரண்டு வார அவகாசம் கொடுக்கவும், பின்னர் திருமணம் நடத்தி வைக்கிறோம்” எனக் கூறி மகனை அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர், பெற்றோரின் அழுத்தத்துக்கு இடமளித்த சஞ்சய் கண்ணன், சாதியை காரணம் காட்டி அனுஷாவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அனுஷா, கடந்த 9ஆம் தேதி வீட்டிலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுங்குவார் சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனுஷாவின் பெற்றோர்கள், “கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகையன் மற்றும் கண்ணன் தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் விசுவநாதன்தான் எங்கள் மகளின் உயிரிழப்புக்கு காரணம்” என குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம், பிரேதபரிசோதனைக்கும் அனுமதிக்க மாட்டோம் என உறவினர்களுடன் இடையப்பாக்கம் கோட்டூர் ஜங்ஷனில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி கங்காதரன் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கலைக்கப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.