டெல்லி செங்கோட்டையை அதிர்ச்சியில் ஆழ்த்திய கார் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பின்னால் மிகவும் பெரிய சதித் திட்டம் இருந்தது என்பதை விசாரணை நிறுவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. வெடிப்பில் 13 பேர் உயிரிழந்த சில மணி நேரங்களுக்குள், நாட்டை கலங்கவைக்கும் புதிய தகவல்கள் வெளியில் வந்துள்ளன.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி… ஒருங்கிணைந்த சதித் திட்டம்
பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பதிலடியாக, ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்புடன் தொடர்புடைய சில மருத்துவர்கள் இணைந்து டெல்லியை இலக்காகக் கொண்டு இந்த பயங்கரவாதத் திட்டத்தை தீட்டியிருந்ததாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே போஸ்டர் சதிக்கு தடையாக
காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய சம்பவம் வழித்தடமாய், உத்தரப்பிரதேசத்தின் சஹாரான்பூரில் மருத்துவர் அதீல் கைது செய்யப்படுகிறார். அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஜம்மு–காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முஜாமில் ஹரியானாவின் பரீதாபாதில் கைது செய்யப்படுகிறார். அவரிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் 350 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து காஷ்மீரில் நடத்தப்பட்ட சோதனைகளில் 2.9 டன் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
வடஇந்திய மாநிலங்களில் தொடர் கைது
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் மருத்துவர்கள் ஷாகீன், பாரூக் மற்றும் கனபூரை சேர்ந்த ஆரிப் மிர் உட்பட கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிப்பில் பலியான மருத்துவர் உமருடன் இவர்கள் அனைவருக்கும் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெடிப்புக்குத் தயார் நிலையில் இருந்த 32 கார்கள்
செங்கோட்டை அருகே வெடித்த ஹூண்டாய் i20 காரைப் போலவே மாற்றங்கள் செய்யப்பட்ட மேலும் இரண்டு கார்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல இன்னும் 32 கார்களில் வெடிகுண்டுகள் வைத்து டெல்லியின் நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்தது என்பது தற்போது தெரிந்து உள்ளது.
நேரத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் அதீல் மற்றும் முஜாமில் இந்த தொடர்ச்சியான வெடிப்புகளைத் தடுக்க முக்கிய காரணமாகியுள்ளனர்.
உமரின் சர்வதேச தொடர்புகள்
கார் வெடிப்பில் உயிரிழந்த உமர், 2022ல் துருக்கி பயணம் செய்து அங்குள்ள தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்களை சந்தித்துள்ளதாகவும், இரண்டு வாரங்கள் தங்கி 14 பேருடன் ரகசிய சந்திப்புகள் நடத்தியதாகவும் உளவுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை
சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் ஹரியானாவில் உள்ள அல் ஃபலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை இந்திய பல்கலைக்கழகங்கள் அமைப்பு இடைக்காலமாக ரத்து செய்துள்ளது.
















