தினமும் இரவு வெடிகுண்டு சத்தம் : ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் கதறல்

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் தங்களது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, உடனடி மீட்புக்கு மத்திய அரசிடம் கண்ணீர் கேட்டுள்ளனர்.

மீசர் தாக்குதல்களால் இருநாடுகளிலும் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை, ஈரானில் 230 பேரும், இஸ்ரேலில் குழந்தைகள் உட்பட 10 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் உள்ள ஆயுத கிடங்குகளை மையமாகக் கொண்டு இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, அந்தப் பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனும் அறிவிப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் அவசர தேவைகளுக்காக உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

“நாங்கள் பயமுறுத்தும் சூழலில் வாழ்கிறோம்”

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஷாகித் பெஹெஸ்தி பல்கலைக்கழகத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

சமீபத்தில், மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வெறும் 5 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதல், அவர்களின் பயத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

ஒரு மாணவர் கூறுகையில் :

“நாங்கள் அபார்ட்மென்டின் அடித்தளத்தில் ஒளிந்து இருக்கிறோம். தினமும் இரவுல வெடிகுண்டு சத்தம் கேட்குது. கடந்த மூன்று நாட்களாக தூங்கவே முடியவில்லை. எங்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து செல்ல மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

மத்திய அரசு பதிலளிக்குமா ?
இந்த மாணவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

Exit mobile version