சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக சென்னை நகரில் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் வருவது வழக்கமாகிவிட்டது. இதற்கு முன்னரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், நடிகை த்ரிஷா உள்ளிட்டோரின் வீடுகளுக்கு இதுபோன்ற மிரட்டல் தகவல்கள் வந்திருந்தன.
நேற்று கூட நடிகர்கள் சத்யராஜ், கார்த்திக், நாசர், அமீர் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் வந்தது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு, அந்த தகவல் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.
அதேபோல், இன்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இல்லத்துக்கும் இதேபோன்ற மிரட்டல் இமெயில் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விரிவான சோதனை மேற்கொண்டனர். ஆய்வின் பிறகு எந்தவித வெடிகுண்டும் இல்லையென உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மிரட்டல் இமெயில் அனுப்பிய மர்ம நபரை கண்டறிய சைபர் கிரைம் பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
			















