புதுடில்லி :
சமீபத்தில் டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலால் தலைநகர் பதட்டத்தில் இருக்கும் நிலையில், தற்போது டில்லி விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10ஆம் தேதி புல்வாமா பகுதியைச் சேர்ந்த உமர் நபி என்பவர் ஓட்டிய காரில் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் பலியான சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்தச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வுத் துறை (என்ஐஏ) விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்தத் தாக்குதலில் சில மருத்துவர்கள் உள்ளிட்ட உயர்நிலை நபர்களுக்கு தொடர்பு உள்ளதாக தெரிய வந்ததையடுத்து, பலரும் காவல் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் ஏற்கனவே பாதுகாப்பு நிலை உயர்த்தப்பட்டுள்ள டில்லியில், புதிய மிரட்டல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு பக்கத்தில், “டில்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என பெயர் தெரியாத நபர் எழுதியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து டில்லி போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். சில மணி நேர தேடுதலுக்குப் பிறகு எந்தவித வெடிபொருளும் இல்லையென உறுதி செய்யப்பட்டதால், அது வெறும் மிரட்டல் செய்தி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதோடு மட்டுமல்லாமல், சென்னை, கோவா உள்ளிட்ட பிற நகரங்களிலுள்ள விமான நிலையங்களுக்கும் இதேபோன்ற மின்னஞ்சல் வழி மிரட்டல் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றிலும் பாதுகாப்பு துறையினர் அவசர சோதனைகளை மேற்கொண்டனர்.
டில்லி போலீஸ் கூறியதாவது :
“நேற்று மாலை 4 மணியளவில் விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு அழைப்பு வந்தது. உடனே சோதனை மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அபாயமும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதேபோல், பிற நகரங்களிலும் இதுபோன்ற மிரட்டல்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று தெரிவித்தனர்.
தற்போது டில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
