மதுரை : மதுரை கள்ளிக்குடி தாலுகா திருமால் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் திருமுருகன் என்ற சூர்யா, மர்மமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செல்வம் – சாந்தி தம்பதியரின் மகனான திருமுருகன், இரண்டாவது திருமணத்திற்கு பிறகு கவின் மற்றும் பிரசாத் என்ற இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் கருவேலங்காட்டுக்குள் மது அருந்தச் செல்வதாகக் கூறி வீடு விட்டு சென்ற அவர், பின்னர் திரும்பவில்லை.
அடுத்த நாள் காலை வரை வீட்டிற்கு வராததால் கவலையடைந்த மனைவி, அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போனதால், கூடக் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், புதுப்பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதியில் திருமுருகனின் இருசக்கர வாகனம் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டறிந்தனர். மேலும் அருகிலேயே தேடியபோது, அழுகிய நிலையில் அவரது உடலும் கிடைத்தது.
தகவலறிந்து ஆவியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். திருமுருகனின் மரணத்தில் கொலைக்கான காரணம் மற்றும் மர்மம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
















