எண்ணூர் கடலில் கரை ஒதுங்கிய நான்கு இளம் பெண்களின் சடலங்கள் !

சென்னை: எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் நான்கு இளம் பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரையில் நான்கு இளம் பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடக்க விசாரணையில், நான்கு பெண்களும் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் தற்கொலை செய்துகொண்டது அல்ல என்றும், வெளிநபர் தொடர்பு எதுவும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக குளிக்க கடலில் இறங்கிய நான்கு பேரும் அலைகளில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தவர்கள் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்தது. அவர்கள் ஷாலினி, கும்மிடிப்பூண்டி ஏலாவூர் பகுதி, ப.காம் இரண்டாம் ஆண்டு மாணவி, தேவகி செல்வம், இலங்கை அகதி முகாமில் வசித்தவர். பவானி, காயத்ரி. இந்த நான்கு பேரும் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள துணிக்கடையில் பணியாற்றி வந்தவர்கள். அதே பணியிடத்தில் பழக்கம் ஏற்பட்டதால் நண்பர்களாக இணைந்தனர்.

இன்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிய ஷாலினி, தனது நண்பிகளுடன் துணிக்கடைக்கு சென்று அங்கிருந்து ரயில் மூலமாக எண்ணூர் கடற்கரைக்கு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு கடலில் குளிக்க இறங்கியபோது ஒருவர் அலைகளில் சிக்கிய நிலையில், மற்றவர்கள் காப்பாற்ற முயற்சித்ததில் அனைவரும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு பெண்களின் உடல்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு இளம் பெண்கள் உயிரிழந்த இந்த சம்பவம், எண்ணூர் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version