ஆந்திரப் பிரதேசம் திருப்பதி அருகே உள்ள மூலவங்கா வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை கவனித்த உள்ளூர் மக்கள், அங்கு தேடிப்பார்த்தபோது இரண்டு சிறுமிகள் உட்பட நால்வர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தகவல் அளிக்கப்பட்ட பாக்காலா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் விசாரணையில், உயிரிழந்தவர்கள் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டம் பாகொந்தொகை கிராமத்தைச் சேர்ந்த ஜெயமாலா, அவரது மகள்கள் தர்ஷினி, ஹர்ஷினி மற்றும் உறவினர் கலைச்செல்வம் என தெரியவந்தது. ஜெயமாலாவின் கணவர் வெங்கடேஷ் குவைத்தில் வேலை செய்து வந்தவர். சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வந்த அவர், சமீபத்தில் ஊர் திரும்பியபோது, அந்தப் பணம் தொடர்பாக கணவர்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், ஜெயமாலா தனது உறவினர் கலைச்செல்வன் மூலம் அந்தப் பணத்தை வட்டிக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயமாலா, தனது குழந்தைகளுடன் காணாமல் போன நிலையில், தற்போது வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
மரணம் குறித்து மர்மம் நிலவுகிறது. ஜெயமாலா மற்றும் கலைச்செல்வம் ஆகியோரின் முகத்தில் துணியால் மூடி, பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் பல்வேறு திசைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.