இங்கிலாந்துக்காக செஸ் விளையாடும் 10 வயதுச் சிறுமி போதனா சிவநந்தன், வுமன் கிராண்ட் மாஸ்டர் (WGM) பட்டத்திற்கான முதல் நார்ம் சாதனை பெற்றுள்ளார்.
இத்தாலை, பிரான்ஸில் நடைபெற்ற Trophee Dole – Pasino Grand Aix சர்வதேச செஸ் தொடரில் 129 புள்ளிகள் பெற்று, தனது FIDE ரேட்டிங்கை 2400ஐ கடந்துள்ளார். இதன் மூலம் WGM பட்டத்திற்கு தேவையான மூன்று நார்ம்களில் ஒன்றை பெற்றுள்ளார்.
போதனா சிவநந்தன் இந்திய வம்சாவளியைக் கொண்டவர். அவரது பெற்றோர் தமிழ்நாட்டின் திருச்சி பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது இங்கிலாந்தில் கரோவில் பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
போத்தனாவுக்கு செஸ் விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டது கொரோனா லாக்டவுன் காலத்தில், அவருக்கு வயது ஐந்து இருக்கும்போது. ஆரம்பத்தில் ஆன்லைனில் இலவச போட்டிகளில் கலந்துகொண்டு, சில மாதங்களிலேயே ஒரு செஸ் “ப்ராடிஜி” என அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
போதனாவிற்கு இரட்டையர் தங்கைகள் இருப்பினும், செஸ் மீது கொண்ட தனிப்பட்ட ஆர்வம் தான் அவரை வேறுபடுத்துகிறது. 8 வயதில் ஐரோப்பியன் ப்ளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் போதனா. அப்போது பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் அவரை நேரில் அழைத்து பாராட்டிய நிகழ்வும் பெரும் பேசுபொருளாகியது.
இளம் வயதில் சாதனைபுரிந்த போதனா, கடந்த ஆண்டு ஹங்கேரியில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர். இங்கிலாந்து வரலாற்றிலேயே மிக இளவயதில் இந்த அளவிலான போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் எனும் பெருமையும் அவருக்கே சொந்தம்.
ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் “இந்தியாவுக்குச் செல்” என கூறி இனவெறித் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலையும் தன்னம்பிக்கையுடன் கடந்து, தொடர்ந்து முன்னேறுகிறார் போதனா.
போதனாவின் சாதனையை பாராட்டிய கிராண்ட் மாஸ்டர் சூசன் போல்கர், அவரை ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்திருக்கிறார். இனவெறி தாக்குதலுக்கு எதிராகவும் பேசியுள்ளார்.
போதனாவை பார்த்தவர்கள், “அவள் தனது வயதைக் கடந்த ஒரு மெச்சூரிட்டியுடன் விளையாடுகிறாள்” எனக் கூறுகிறார்கள். தோல்விகளால் பாதிக்காமல், உற்சாகத்துடன் தொடரும் அவரது ஆட்டம், பலருக்கும் மெய்சிலிர்க்கச் செய்கிறது.
ஹோ யீபான் (14 வயதில்), ஹம்பி (15 வயது 1 மாதத்தில்), ஜூடித் போல்கர் (15 வயது 5 மாதத்தில்) போன்ற இளவயது செஸ் லெஜென்டுகளின் பாதையில், போதனாவும் விரைவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வாரென நம்பிக்கை செலுத்தப்படுகிறது.