பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தின் வெளிப்புறத்தில் இன்று மாலை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குவெட்டாவின் சர்கூன் சாலையில் நடந்ததாக கூறப்படுகிறது. வெடிப்பு ஏற்பட்டதும் திடீரென துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு சத்தத்தால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களின் ஜன்னல்கள், கதவுகள் உடைந்து சேதமடைந்துள்ளன. தகவல் அறிந்து பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து, காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனடியாக பணிக்கு வருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சம்பவத்தின் காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை எந்த அமைப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

















