கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் நுழைவாயிலை மறித்து கருங்கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்பட்டுள்ளது.மகாதானபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இதில் ஒரு வாசலின் முன்பாக கடந்த நான்கு நாட்களாகக் கருங்கற்கள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாகப் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் உள்ளே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது: பொதுப்பணித் துறையின் மூலம் பள்ளிக்குத் தேவையான புதிய கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்தப் பணிகளுக்காகவே கருங்கற்கள் அங்கு கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன. கற்கள் குவிக்கப்பட்ட நுழைவாயில் தற்காலிகமாகப் பூட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றொரு பெரிய நுழைவாயில் வழியாகப் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டாலும், பள்ளி நுழைவாயிலிலேயே கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால் ஓடி விளையாடும் சிறுவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். மேலும், நான்கு நாட்களாகக் கற்கள் அகற்றப்படாமல் மறித்து நிற்பது பள்ளிச் சூழலுக்கு இடையூறாக இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்குவதுடன், மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
