பாஜக தனது புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், இறுதி கட்ட பரிசீலனையில் நான்கு முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நட்டாவின் பதவிக்காலம் முடிந்தும் தலைவர் அறிவிக்கப்படவில்லை
பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் ஏழு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால் அடுத்த தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டி, “உலகிலேயே பெரிய கட்சி என்கிறீர்கள்… ஆனால் ஒரே ஒரு தலைவரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லையா?” என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நாடாளுமன்றத்தில் கேலி செய்திருந்தார்.
இந்த தாமதத்திற்கு பாஜக – ஆர்.எஸ்.எஸ் இடையேயான கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
வலுவான தலைமையை கோரும் ஆர்.எஸ்.எஸ்
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வலுவான தலைவரை பாஜகவின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி வருகிறது. அதன்படி, மாநில அளவிலும் வலுவான தலைவர்கள் பதவியேற்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “75 வயது கடந்தவர்கள் பொது வாழ்வில் தலைமைப் பொறுப்புகளை விட்டு விலகி அடுத்த தலைமுறைக்கு இடமளிக்க வேண்டும்” என கூறியிருந்தார். இது பிரதமர் மோடிக்கான மறைமுகச் செய்தியாகவே கருதப்பட்டது. எனினும், பின்னர் பாஜக – ஆர்.எஸ்.எஸ் உறவுகள் சீராகும் வகையில் இரு தரப்பும் சமரசத்தில் ஈடுபட்டன.
பரிசீலனையில் உள்ள நான்கு பேர்
பாஜக தலைவருக்கான பரிசீலனையில் இறுதி கட்டத்தில் நான்கு முக்கிய தலைவர்கள் இடம்பிடித்துள்ளனர் :
மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சௌஹான்
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்
குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா
ஒடிஷாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
ரூபாலா பிரதமர் மோடிக்கே நெருக்கமானவர் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். அதேசமயம், சௌஹான் மற்றும் ஃபட்னவீஸ் ஆர்.எஸ்.எஸ் விருப்பப் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்-ன் கைகள் பலப்படுகிறதா?
2014 முதல் 2024 வரை பாஜக முழுமையாக மோடி-ஷா கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ் கரம் பலப்படுகிற சூழல் உருவாகியுள்ளது. மேலும், 2029 பொதுத் தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக மோடிதான் இருப்பார் என பாஜக – ஆர்.எஸ்.எஸ் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, அடுத்த பாஜக தலைவர் யார் என்பதற்கான போட்டியில் ஆர்.எஸ்.எஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.