திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், தமிழக பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “பா.ஜ.க.வின் மாயாஜால வேலைகள் தமிழகத்தில் எடுபடாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம்
“திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்துக் கொண்டு, தமிழகத்தில் பா.ஜ.க.வால் ஒருபோதும் காலூன்ற முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற இந்துக்களிடமிருந்து தமிழக இந்துக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். இங்கு அவர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைத் திணிப்பது நடக்காது. பா.ஜ.க.வின் மாயாஜால வேலைகள் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது,” என்று அமைச்சர் ரகுபதி கூறினார். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், “திருப்பரங்குன்றம் விஷயத்தில் நான் என்ன தவறுதலாகச் சொன்னேன் என்பதை தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்த வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டது என்பதையும் அவர் சொல்ல வேண்டும்.”
“தீர்ப்பை மாற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் சொல்லப்பட்ட தீர்ப்பைத்தான் நாங்கள் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரகுபதி, “அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவைப் போல ஜோக்கர் வேறு யாரும் இல்லை. தமிழக மக்கள் அ.தி.மு.க.வினரை நன்கு புரிந்துகொண்டுள்ளனர்,” என்று விமர்சித்தார்.
மேலும், “நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எது சரி, எது தவறு என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்து செயல்படுவார்கள்,” என்று அமைச்சர் ரகுபதி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

















