தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஈரோட்டில் வரும் ஜனவரி 5-ஆம் தேதி பாஜக விவசாய அணி சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக விவசாய அணியின் மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜன், இந்த மாநாடு தமிழகத்தில் நிலவும் “திராவிட மாடல்” ஆட்சியின் நிர்வாகத் தோல்விகளையும், விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுக்கான் நாளை (ஜனவரி 4) மாலை ஈரோடு வருகிறார். அவரது வருகை வெறும் அரசியல் நோக்கத்திற்காக மட்டும் அல்லாமல், கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகள் ஏன் இன்னும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளனர் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை வழங்கவே அவர் வருகிறார் என்று நாகராஜன் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சரின் பயணத் திட்டத்தின்படி, ஜனவரி 5-ஆம் தேதி அதிகாலை 7 மணி முதல் அவர் களப்பணியில் ஈடுபடுகிறார். ஈரோடு மஞ்சள் மண்டி ஏலத்தில் பங்கேற்று விவசாயிகள் மற்றும் வணிகர்களின் குறைகளைக் கேட்டறியும் அவர், மஞ்சள் சாகுபடி நிலங்களை நேரடியாகப் பார்வையிடவும் உள்ளார். இதனைத் தொடர்ந்து, வில்லரசம்பட்டி லட்சுமி துரைசாமி மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டில், இயற்கை விவசாயத்தின் சவால்கள், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் செயல்பாடு மற்றும் பாண்டியாறு – புன்னம்பழா உள்ளிட்ட நீண்டகால நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் விவாதிக்கிறார். அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு, சுமார் 2,000 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து, வங்கிக் கடனுதவி மற்றும் சுயதொழில் தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து உரையாடுகிறார். மேலும், சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.
தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஜி.கே. நாகராஜன், மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மைக்காக வழங்கும் நிதியைத் தமிழக அரசு முறையாகப் பயன்படுத்தாததால் மாநிலம் முழுவதும் குப்பைக் காடாக மாறியுள்ளது என்று சாடினார். அண்டை மாநிலமான கேரளா இந்தத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் நிர்வாகச் சீர்கேடு நிலவுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், கள் இறக்குவதற்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்த அவர், தமிழக அரசு மது விற்பனை வருமானம் குறைந்துவிடும் என்ற அச்சத்திலேயே கள்ளுக்குத் தடை விதித்து விவசாயிகளின் வருமானத்தைத் தடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். தெருநாய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசித் திட்டங்களிலும் நிதி முறைகேடு நடப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், குஷ்பு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டை முன்னிட்டு 125 அரங்குகள் கொண்ட பிரம்மாண்ட விவசாயக் கண்காட்சியை நாளை (ஜனவரி 4) வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார். கொங்கு மண்டலத்தின் முக்கிய விவசாயச் சங்கங்கள் மற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின் போது மாநிலப் பொதுச்செயலாளர் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
















