மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியரை கைது செய்ய கோரி பி.ஜே.பி.யினர் ஆர்ப்பாட்டம்.
பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியரை உடனே கைது செய்யக்கோரி பரமக்குடியில் பி.ஜே.பி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் எஸ்.என்.வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் அருள்ராஜன் என்பவர் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது,
ஆசிரியர் அருள்ராஜனின் தொல்லை குறித்து சில மாணவிகள், பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் அருள்ராஜன் மீது மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் மனு அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் ஆசிரியர் அருள்ராஜனை முதல் கட்டமாக விசாரித்த மகளிர் காவல் நிலையத்தினர், அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் வழக்குப்பதிவு செய்த பின்னரும் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் அருள்ராஜனை கைது செய்யாததை கண்டித்தும், உடனே அவரை செய்யக்கோரியும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய பள்ளி நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்தும் பள்ளி முன்பு பி.ஜே.பி., மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடி நகர் பி.ஜே.பி., சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.