அமித்ஷாவை விமர்சனம் செய்த திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவை கண்டித்து புதுச்சேரியில் பாஜகவினர் ராசாவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா தரக்குறைவாக பேசியதை கண்டித்து பாஜகவினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமித்ஷாவை தரக்குறைவாக பேசிய திமுக எம்.பி ராசாவை கண்டித்து நகர மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணராஜ் தலைமையில், மாநில செயலாளர் வெற்றிசெல்வம் முன்னிலையில் புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஒன்றினைந்து திமுக எம்.பி. ராசாவுக்கு எதிராகவும், அவர் பதவி விலக கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் திடீரென தாங்கள் கையில் வைத்திருந்த ராசாவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், படத்தை தீயிட்டு கொளுத்தியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.