பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் திருமாறன்ஜி, கட்சி தலைவர்களைத் திருப்பரங்குன்றம் அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குச் சென்றபோது தமிழக காவல்துறை கைது செய்ததைக் கண்டித்து, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக மற்றும் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் இணைந்து வத்தலக்குண்டு பேருந்து நிலையம் முன்பாக இரவு 9 மணிக்கு அரை மணி நேரத்திற்கு மேலாகப் பெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது.
பாரம்பரியமாகத் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து இந்து அமைப்புகளுக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையிலான குழுவினர் மற்றும் தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் திருமாறன் ஜி, பிற கட்சி தலைவர்கள் சேர்ந்து திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்ப்பதற்காகவும், விதிமீறல்களைக் காரணம் காட்டியும் தமிழக காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மாநிலத் தலைவரின் இந்த திடீர் கைதைக் கண்டிக்கும் விதமாக, தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டங்கள் வலுக்கத் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக, பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் தலைவர் முத்துராமலிங்கம் அறிவுரையின்படி வத்தலக்குண்டு ஒன்றியத்தின் சார்பில், வத்தலக்குண்டுவின் முக்கியப் பகுதியான தியாகி சுப்பிரமணிய சிவா பேருந்து நிலையம் முன்பாக பேருந்து மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்திற்கு, வத்தலக்குண்டு பாஜக மண்டலத் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் விஜி, வத்தலக்குண்டு நகரச் செயலாளர் மதுரை வீரன், நிலக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் அழகுமணி, வத்தலக்குண்டு நகரச் செயலாளர் ரகு, ஆன்மீகப் பிரிவு காந்திநகர் இளங்கோ, மத்திய அரசின் நலத்திட்டப் பணிகள் பிரிவு மாவட்டச் செயலாளர் விஜயகுமார், வத்தலக்குண்டு ஒன்றியச் செயலாளர் தாய் பிரஸ் முருகேசன், தெற்கு ஒன்றியத் தலைவர் செந்தில், வடக்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக தொண்டர்கள் மற்றும் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டு, ‘தமிழக அரசின் அடக்குமுறையைக் கண்டிக்கிறோம்’, ‘ஆன்மீக உரிமைகளை மறுக்காதே’, ‘கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுதலை செய்’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மறியலால், வத்தலக்குண்டு-தேனி சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில், வத்தலக்குண்டு காவல்துறை ஆய்வாளர் கௌதம், சார்பு ஆய்வாளர் சேக் முகமது உள்ளிட்ட ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்து, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தலைவர்களின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற இந்த திடீர் சாலை மறியல் மற்றும் அதைத் தொடர்ந்த கைது நடவடிக்கையால் வத்தலக்குண்டு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தமிழக அரசு ஆன்மீக விஷயங்களில் தலையிடுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அரசியல் அரங்கில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

















