அடுத்த தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழ் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தி.மு.க.வின் ‘பி டீம்’ எனும் புகாரோடு, அவரை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க.வுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்கு எட்டு மாதங்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, விஜய்யை கூட்டணியில் சேர வலியுறுத்தி வருகிறார். ஆனால், விஜய் அதனை தொடர்ந்து மறுத்துவந்திருக்கிறார்.
பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகையில், “2016ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியை பயன்படுத்தி தி.மு.க.வை வீழ்த்திய அ.தி.மு.க., இம்முறை தி.மு.க.வினால் விஜயைப் பயன்படுத்த முயற்சிக்கிறது. தி.மு.க. அரசு மீதான மக்கள் அதிருப்தி ஓட்டுகள் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு செல்லாமல் இருக்க, அந்த ஓட்டுகளை விஜய் பிரிக்கவேண்டும் என தி.மு.க. திட்டமிட்டுள்ளது” என்றனர்.
இதனால், விஜயின் அணுகுமுறைகளை பா.ஜ.க. மிக நுட்பமாக கவனித்து வருவதாகவும், அவர் தி.மு.க. தரப்பினரிடமிருந்து ‘அ.தி.மு.க. உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்படுத்தக்கூடாது’ என்ற அறிவுரையைப் பெற்றதாகவும், பா.ஜ.க. தகவல் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, விஜயை கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகளை நிறுத்திவிட்டு, தற்போதுள்ள கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்கலாம் என பா.ஜ.க. தலைமை, பழனிசாமியிடம் பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.