தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மற்றும் அதிமுக இணைந்துள்ளதாகவும், பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணம் தொடர்ந்து நடைபெறும். மக்களுக்கு நிம்மதியான, நல்லாட்சியை வழங்கும் வரை இந்த பயணம் நிறைவடையாது. இதுவரை 10 மாவட்டங்களில் 46 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்துள்ளேன். இந்த எழுச்சிப் பயணத்தை வெற்றியடையச் செய்த தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.”
தெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடன் பெறுவதில் ஏற்படும் சிக்கலையும் அவர் வலியுறுத்தினார். “விவசாய பயிர்க்கடன்கள் பெறுவதில் பெரும் பிரச்சினை நிலவுகிறது. குறிப்பாக சிபில் ஸ்கோர் பிரச்சினை பெரிதாக இருக்கிறது. இது, விவசாயிகள் கடன் பெறுவதற்கு தடையாக இருக்கிறது,” எனக் குற்றம்சாட்டினார்.