திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், “உடல் நலம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைச் செல்வம். உடல் நலம் சரியாக இருந்தால்தான் நாம் முழுமையாக பணியில் ஈடுபட்டு வருவாய் ஈட்ட முடியும்.
இதற்காக ஒவ்வொருவரும் உடல்நலத்தை பேணுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
“அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ‘சீமான் சென்டர்’ பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இரத்த தானம் என்பது கட்டாயம் அல்ல; ஆனால் தன்னார்வமாக முன்வருவது மனிதநேயத்தின் உச்ச வடிவம் ஆகும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யும் எண்ணம் இளைஞர்களிடையே இயல்பாக வளர வேண்டும். தாங்கள் மட்டுமல்லாது, தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்களையும் இதற்காக ஊக்குவிக்க வேண்டும்.”
நிகழ்ச்சியில், கடந்த ஆண்டில் இரத்த தான முகாம்களை சிறப்பாக நடத்திய 68 தன்னார்வ அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். “இரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு எந்தவித பாகுபாடுமின்றி தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன்”
என்ற வாசகத்துடன் கூடிய உறுதிமொழியை மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேரா. திரு. வீரமணி, துணை முதல்வர் பேரா. சலீம், மருத்துவ கண்காணிப்பாளர் பேரா. சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் மரு. புவனேஸ்வரி, காசநோய் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் மரு. முத்து பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பல தன்னார்விகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நோக்கம் — சமூகத்தில் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது மற்றும் இளைஞர்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் பழக்கத்தை உருவாக்குவது ஆகும் “ஒரு தன்னார்வ இரத்த தானம் மூன்று உயிர்களுக்கு உயிர் கொடுக்கிறது. இது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் நன்மை தரும் சமூகப் பணி.” “பிறப்பு என்பது சாதாரண சம்பவமாக இருந்திருக்கலாம், ஆனால் நமது இறப்பு சரித்திரமாக பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் தன்னலம் கருதாமல் இரத்த தானம் செய்கிறீர்கள் – இதுவே உங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் உயர்ந்த செயல்.” என மாவட்ட ஆட்சியர் உணர்ச்சி வரிகளாக பேசினார்.

















