மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு வியப்பூட்டும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. நிச்சயதார்த்த விழாவுக்கு முன்பே, மணமகனின் தாய் தனது மகனுக்காக தேர்வு செய்யப்பட்ட மணமகளின் தந்தையுடன் காதலித்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் இரு குடும்பங்களின் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் திடீரென நின்றுவிட்டன.
உஜ்ஜைன் மாவட்டத்தின் உன்ட்வாசா கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், தனது கணவரும் இரு மகன்களும் இணைந்து வசித்து வந்தார். இவரது பெரிய மகனுக்காக பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் திருமண பேச்சு நடந்தது. மணமகளின் தாய் உயிரிழந்திருந்ததால், திருமண ஏற்பாடுகளை அந்தப் பெண்ணின் தந்தை மேற்கொண்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் ஜாதகப் பொருத்தமும் பார்த்து நிச்சயதார்த்த நாள் நியமிக்கப்பட்டது.
ஆனால் விழாவுக்கு சில நாட்களுக்கு முன்பே மணமகனின் தாய் திடீரென மாயமானார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகன் போலீசில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்தப் பெண் சிக்லி கிராமத்தில் 50 வயது விவசாயியுடன் வசித்து வந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த நபர் வேறு யாரும் அல்ல, அவரது மகனுக்காக பார்த்திருந்த மணமகளின் தந்தை என தெரியவந்தது.
திருமண ஏற்பாடுகள் நடைபெறும் போதே இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் காதலித்து ஒன்றாக வாழ தீர்மானித்ததால், அவர்கள் இருவரும் ஓட்டம் பிடித்து சென்றனர். போலீசார் இருவரையும் நிலையம் அழைத்து விசாரித்தபோது, “நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம்; பிரிந்து வாழ முடியாது” என 45 வயது பெண் தெரிவித்துள்ளார். இருவரும் மேஜர் வயதினரானதால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இதனால், மகனுக்கும் மகளுக்கும் திட்டமிட்டிருந்த நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது. காதலின் காரணமாக ‘சம்பந்தம் மாறி’ போன இந்த விசித்திரமான சம்பவம் மத்தியப் பிரதேசம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
