டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்ட கடும் வன்முறையின்போது, ஹிந்து இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கி எரித்து கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சமீபத்தில் மாணவர் அமைப்புத் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் சுடப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் போது பத்திரிகை அலுவலகங்கள் தீக்கிரையாகியதுடன், டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் மீதும் கல் வீச்சு தாக்குதல் நடைபெற்றது.
இந்த பின்னணியில், மைமென்சிங் நகரில் உள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் (30) என்பவரை, மதம் தொடர்பாக அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி, ஒரு கும்பல் சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் திருப்தி அடையாத அந்த கும்பல், தீபு சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ், “இத்தகைய மனிதாபிமானமற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி முகமது யூனுஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த கொலை வழக்கில் முகமது லிமோன், முகமது தாரெக், முகமது மாணிக், எர்ஷாத் அலி, நிஜாம் உதின், ஆலோம்கீர் மற்றும் முகமது மிராஜ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய தொடர் சோதனைகளில் இவர்கள் கைதாகியுள்ளனர்.
சசி தரூர் கண்டனம்
இந்த கொடூர சம்பவம் குறித்து இந்திய காங்கிரஸ் எம்பி சசி தரூர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வங்கதேசத்தில் தொடரும் வன்முறைகளுக்கிடையே, மனதை உலுக்கும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதே நேரத்தில், இந்த குற்றத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வங்கதேச அரசு எடுக்க உள்ள நடவடிக்கைகள் என்ன, மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க என்ன செய்கிறது என்பதையும் அறிய விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.















