வங்கதேச விமானப்படையின் பயிற்சி ஜெட் விமானம் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் இன்று மதியம் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நடந்தது. பயிற்சியின் போது புறப்பட்டிருந்த விமானப்படையின் F-7 BGI வகை ஜெட் விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வளாகத்தில் விழுந்ததாகத் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த நான்கு பேரில் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் மருத்துவ தரப்புகள் தெரிவித்துள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்து ஏற்பட்டவுடன் மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் நிகழ்ந்தபோது பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் மாணவர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து வங்கதேச ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் பற்றிய முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.