விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் காட்சி மற்றும் பின்னணி இசையை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆரோமலே படக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
2010-ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. கெளதம் மேனன் இயக்கிய இந்த காதல் படம், இசை மற்றும் கதை சொல்லல் காரணமாக வெளியான காலத்தில் முதல் இன்றுவரை பாராட்டப்பட்ட படமாக உள்ளது.
இந்த நிலையில், ஆரோமலே படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சில காட்சிகள் மற்றும் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டதாக கூறி, ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் சார்பில் டி. ராஜீவ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணை நடந்தபோது, காப்புரிமைச் சட்டப்படி அசல் படக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு காட்சி, இசையும் பயன்படுத்த முடியாது என வழக்குத் தரப்பு வாதிட்டது. இதனை கருத்தில் கொண்ட நீதிபதி என். செந்தில்குமார், காப்புரிமை மீறல் குறித்து ஆதாரங்கள் உள்ளன எனக் கருதி, ஆரோமலே படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படக்காட்சிகள் அல்லது இசை பயன்படுத்தத் தடை விதித்தார்.
கிஷன் தாஸ், ஷிவாத்மிகா உள்ளிட்டோர் நடித்த ஆரோமலே படத்தை, கெளதம் மேனனின் முன்னாள் உதவி இயக்குநரான சாரங் தியாகு இயக்கி இருந்தார். இப்படத்துக்கு சித்துகுமார் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

















