நாட்டில் கலப்பட இருமல் மருந்தால் பல குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், இருமல் மருந்து விற்பனையில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
புதிய மாற்றங்களின்படி, இனி மருத்துவர் பரிந்துரையின்றி (Prescription) இருமல் மருந்தை வாங்க முடியாது. உரிமம் பெற்ற மருந்துக் கடைகளில் மட்டுமே இம்மருந்துகள் விற்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுவரை, உரிய மருந்து விநியோக அனுமதியின்றியும் சில பகுதிகளில் இருமல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. வரவிருக்கும் புதிய விதிகள் அமலுக்கு வந்தால், இத்தகைய நடைமுறைகள் முற்றிலும் நிறுத்தப்பட உள்ளன.
கலப்பட இருமல் மருந்தால் 25 குழந்தைகள் பலி
முன்னதாக, ‘கோல்ட்ரிஃப்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட இருமல் மருந்தில் நச்சுப் பொருளான டையெத்திலீன் கிளைகோல் (Diethylene Glycol) அதிக அளவில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இது பொதுவாக பெயிண்ட், மை உள்ளிட்ட தொழில்துறை பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனமாகும்.
இந்த மருந்தை அருந்திய மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்தது. உடற்கூறாய்வு அறிக்கையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 48% அதிகமாக இந்த நச்சு கலந்திருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
சம்பந்தப்பட்ட மருந்தை தயாரித்த நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாக இருப்பதால், தமிழ்நாடு அரசு அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ததுடன், முக்கிய வேதியியல் ஆய்வாளரை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நீடித்து வருகிறது.




















