சென்னை:
ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை ‘பெயில்’ (தோல்வியாளர்) ஆக்கும் நடைமுறை, தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதங்களை, பள்ளிகள் பெற்றோரிடம் பெற தொடங்கி உள்ளன.
இதுவரை, 2009ல் அமலுக்கு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரும் பெயில் ஆக்கப்படக் கூடாது என்ற விதி இருந்தது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை 2020 நடைமுறைக்கு வந்ததையடுத்து, இவ்விதி திருத்தப்பட்டு, 3, 5, 8ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களை எட்டாத மாணவர்களை பெயில் ஆக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2025-ம் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்த விதி செயல்படுத்தப்படுகிறது. ஜனவரி 15-ம் தேதி மத்திய கல்வி அமைச்சகம், பழைய சட்டத்தின் 16, 38வது விதிகளை திருத்தி, மார்ச் 18-ம் தேதி புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது.
பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம்
பள்ளிகள் தற்போது மாணவர்களின் பெற்றோரிடம், “எங்கள் குழந்தை தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்களை எடுக்கவில்லை என்றால், பெயில் ஆக்கப்படுவதற்கு எங்களால் எதுவும் குறை சொல்ல முடியாது” என்ற அர்த்தத்தில் ஒப்புதல் கடிதங்களை பெற்றுக் கொள்கின்றன.
அதில் கூறப்படுவதாவது, “பெயிலான மாணவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு வழங்க வேண்டும். அதிலும் தவறினால் மட்டுமே அந்த வகுப்பில் மீண்டும் படிக்க அனுமதி வழங்க வேண்டும்” என்றனர். மேலும், கல்வித் திறனில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனிப்பயிற்சி வழங்க பள்ளிகள் ஏற்பாடு செய்யும் கட்டாயமும் உள்ளது.
பெற்றோரின் கவலை
சில பெற்றோர் தெரிவித்ததாவது, “தனியார் பள்ளி என்பதால், ஒப்புதல் கடிதம் கொடுக்க மறுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதை பயன்படுத்தி, மதிப்பெண்கள் குறைவாக உள்ள குழந்தைகளை வெளியேற்றும் சூழ்நிலையை பள்ளிகள் உருவாக்கக்கூடாது” என்றனர்.