ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் 5.2 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜபல்பூரைச் சேர்ந்த சுபாங்கி யாதவ், கர்ப்ப கால பராமரிப்பிற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. வழக்கமாக குழந்தைகள் 2.5 கிலோ முதல் 3.2 கிலோ வரையிலேயே பிறக்கின்றன. ஆனால், 5.2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக குழந்தை பிறந்தது மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மருத்துவர்கள் தெரிவித்ததாவது:
“இந்த மருத்துவமனையில் இதுவரை இத்தகைய அதிக எடையுடன் குழந்தை பிறந்தது இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்ப காலத்தில் தாயின் உணவுமுறைகள், குழந்தையின் அதிக எடைக்குக் காரணமாக இருக்கலாம். சிசேரியன் சிகிச்சை எங்களுக்கு சவாலாக இருந்தது. எனினும் தாய், குழந்தை இருவரும் நலமாக உள்ளனர்,” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், “எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார்,” என்று குழந்தையின் தாய் சுபாங்கி யாதவ் மகிழ்ச்சி தெரிவித்தார். அதிக எடையுடன் பிறந்ததால், தாய் மற்றும் குழந்தை இருவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து வைத்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.