புதுடில்லி : “விண்வெளியில் இருந்து நமஸ்கார்… இது மிகப் பெரிய பெருமை” எனக், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த இந்தியர் சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட விண்வெளி பயணக்குழு, நேற்று விண்வெளிக்குப் புறப்பட்டு 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, இன்று (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை (ISS) எட்டினர்.
இந்த பயணத்தின் மூலம் சுபான்ஷு சுக்லா, விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியராகவும், ISS-ஐ சென்ற முதல் இந்தியர் ஆவார்.
விண்வெளியில் 14 நாட்கள் தங்கியிருந்து, பல்வேறு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள். தனிப்பட்ட நினைவாக, சுபான்ஷு சுக்லா, இந்திய கலாச்சாரத்தைக் காட்டும் அன்னப்பறவை பொம்மையையும் தனது பயணத்தில் எடுத்துச் சென்றுள்ளார்.
விண்கலத்திலிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு உரையாற்றிய சுபான்ஷு சுக்லா, தனது உணர்வுகளைப் பகிர்ந்தபோது கூறியதாவது :
விண்வெளியில் இருந்து நமஸ்கார்! இது ஒரு அற்புதமான அனுபவம். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது என் வாழ்நாளின் பெருமையான தருணம். சக வீரர்களுடன் இணைந்து பயணம் செய்யும் இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது என் தனிப்பட்ட பயணம் அல்ல. நாங்கள் அனைவரும் ஒரே குழுவாக வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்.
அதேவேளை, விண்வெளியில் எந்த சப்தமுமின்றி மிதப்பது வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொரு இந்தியரும் என் இதயத்தில் இருக்கிறார்கள். என் அனுபவங்களை பகிர ஆர்வமாக இருக்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தில் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இப்போதெல்லாம் நான் ஒரு சிறு குழந்தையைப் போலவே உணருகிறேன், எனக் கூறினார் சுபான்ஷு சுக்லா.