கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில், வாங்க
கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் பொது மக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குலசேகரம், கன்னியாகுமரி. திங்கள்நகர், கொல்லங்கோடு, குழித்துறை, குளச்சல், தக்கலை உள்பட 8 இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இன்று நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தீ விபத்துகளை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது தொடர்பாக செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. குறிப்பாக வீடுகளில் காஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்தால், அதை எவ்வாறு அணைப்பது தொடர்பாக செயல்முறை விளக்கம்
அளிக்கப்பட்டது.
சிலிண்டரில் தீயை பற்ற வைத்து, அதை எப்படி அணைக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் விளக்கினர். சிலிண்டரில் தீ பிடித்தால் உடனடியாக பதற்றம் அடையாமல் போர்வை அல்லது சணல் சாக்கு போன்றவற்றை தண்ணீரில் நனைத்து எவ்வாறு சிலிண்டரை சுற்றி பொருத்த வேண்டும் என்பதை விளக்கினர். இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Exit mobile version