ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.
முதல் போட்டியில் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று அடிலெய்டில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் சுப்மன் கில் (9) மற்றும் விராட் கோலி (0) விரைவில் வெளியேறியதால் அணிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அதன்பின் ரோஹித் சர்மா (73) – ஷ்ரேயாஸ் ஐயர் (61) இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து அணியை நிலைநாட்டினர். பின்னர் அக்சர் படேல் 44 ரன்களும், ஹர்ஷித் ராணா 24 ரன்களும் சேர்த்து இந்திய அணியை 264 வரை அழைத்துச் சென்றனர்.
265 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்தில் சிறிய தடைகள் ஏற்பட்டன. கேப்டன் மிட்செல் மார்ஷ் (11), டிராவிஸ் ஹெட் (28) விரைவில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் மேத்யூ ஷார்ட் (74) மற்றும் கூப்பர் கோனோலி (61) இணைந்து இந்திய பந்துவீச்சை சமாளித்து அணியை வெற்றிக்குத் தள்ளினர். மிட்செல் ஓவன் 36 ரன்கள் சேர்த்தார்.
46.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2–0 என கைப்பற்றியது.
இறுதிப் போட்டி சில நாட்களில் சிட்னியில் நடைபெற உள்ளது. இந்தியா அந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக முயற்சிக்கிறது.

















