பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி சிறுவனை கடத்தல் முயற்சி… 3 மணி நேரத்தில் காவல்துறையால் மீட்பு !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த வேணு, தனது நான்கு வயது மகனை இன்று பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டின் உள்ளே வாகனத்தை நிறுத்திய வேணு, மகனை இறக்கி வைக்கும்போது, திடீரென ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் ஓடி வந்து, அவரது முகத்தில் மிளகாய்ப்பொடி தூவினார். பின்னர் சிறுவனை தூக்கி, அருகில் தயாராக நின்றிருந்த காரில் ஏற்றி சென்றார்.

இதனைத் தடுத்துக் கொள்ள முயன்ற வேணு கார் கதவைப் பிடித்தபடி இழுத்துச் செல்லப்பட்டு தரையில் விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ச்சியடைந்த வேணு உடனடியாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் விரைவாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கர்நாடகா பதிவெண் கொண்ட ஒரு கார் சம்பவத்துக்கு முன்பே அப்பகுதியில் நிற்பது பதிவாகியிருந்தது கண்டுபிடித்தனர். அதில் இருந்தே ஹெல்மெட் அணிந்த நபர் இறங்கி, வேணுவின் வீட்டின் முன்பாகக் காத்திருந்து தாக்குதல் நடத்தி, சிறுவனை கடத்திச் சென்றது தெளிவாக காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து 4 தனிப்படைகளை அமைத்த காவல்துறை, விரைவான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. சுமார் 3 மணி நேரத்திற்குள், வேலூர் – ஆம்பூர் சாலையில் உள்ள மாதனூர் பகுதியில், சாலை ஓரத்தில் தனியாக நின்ற சிறுவன் குறித்து தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார், அந்தக் குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.

புகைப்படம் மூலம் குடும்பத்தாரிடம் உறுதி செய்யப்பட்ட சிறுவன் பின்னர் குடியாத்தம் கொண்டு வரப்பட்டார். காவல்துறை தீவிரமாகக் கண்காணிப்பு மேற்கொண்டதால், அச்சத்தில் மாட்டிய கடத்தல்காரர்கள் சிறுவனை விட்டு விலகிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தற்போது குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணவும், கடத்தலின் நோக்கம் என்ன என்பதையும் கண்டறியவும் போலீசார் விசாரணை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

Exit mobile version