சென்னை: ரேபிடோ பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண் மீது பாலியல் தொல்லை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், தனது கணவருடன் மதுரவாயலில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டிற்கு செல்ல இரவு நேரத்தில் ரேபிடோ பைக் டாக்சியை அவர் புக் செய்துள்ளார்.
புக் செய்யப்பட்ட வாகனத்தை ஓட்ட வந்த இளைஞர், வானகரத்திலிருந்து பள்ளிக்கரணை வழியாகச் சென்றுள்ளார். எனினும், திரும்பி வரும்போது வழித்தவறி, ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் பைக்கை நிறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், டிரைவர் இளம்பெண்ணை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த பெண் உடனே தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், வானகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், குற்றச்சாட்டில் தொடர்புடைய தேனி மாவட்டம் ஓடைப்பட்டி தாலுக்காவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர்.
போலீசார் அவரது பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிவக்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பைக் டாக்சி சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் இரவு நேரங்களில் பயணம் செய்வது தொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
