ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொளப்பலூர், அம்மன்கோவில் பதியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற பச்சைநாயகி அம்மன் திருக்கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, பக்திப் பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. நடப்பாண்டுக்கான விழா கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் முறைப்படி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு குண்டம் மைதானத்தில் பாரம்பரிய முறைப்படி விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு தீ மூட்டப்பட்டது.
நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் மலையப்பாளையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலிருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தம் எடுத்து வந்து ‘அம்மை அழைத்தல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருக்கொடி தீபம் ஏற்றப்பட்டு, குண்டத்தைச் சுற்றிப் பூஜைகள் செய்யப்பட்டன. விடிய விடியக் காத்திருந்த பக்தர்கள் “ஓம் சக்தி, பராசக்தி” என்ற சரண கோஷங்களை எழுப்பினர். காலை 8:45 மணி அளவில், தலைமைப் பூசாரி ராஜா அக்னி குண்டத்திற்குப் புனித நீர் தெளித்துப் பூக்களைத் தூவி ஆராதனை செய்த பின்னர், முதல் ஆளாகக் குண்டம் இறங்கி விழாவைத் தொடங்கி வைத்தார்.
தலைமைப் பூசாரியைத் தொடர்ந்து, கையில் வேல் ஏந்தியும், மஞ்சள் ஆடை அணிந்தும் விரதமிருந்த நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். காலை 9:45 மணி வரை நீடித்த இந்த வைபவத்தில், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எந்தவித பயமுமின்றிப் தீ மிதித்து அம்மனின் அருளைப் பெற்றனர். குண்டம் இறங்கிய பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் திருநீறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கோபி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால், அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழுவினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்














