ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
மொத்தம் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து போட்டியில் பங்கேற்கின்றன. ஏ பிரிவு – இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன்; பி பிரிவு – ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங்.
இந்தப் போட்டி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது – குரூப் சுற்று, சூப்பர் ஃபோர் மற்றும் ஃபைனல்.
இந்த முறை ஆசிய கோப்பை டி20 ஃபார்மேட்டில் நடைபெறுகிறது. டி20 உலகக்கோப்பைக்கான தயாரிப்பாகவே இந்தத் தொடர் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பரிசுத்தொகை தொடர்பான விவரங்களும் வெளியாகியுள்ளன. சாம்பியனாகும் அணிக்கு ரூ.2 கோடி 60 லட்சம், ரன்னர்ஸ்-அப்பாகும் அணிக்கு ரூ.1 கோடி 30 லட்சம் வழங்கப்பட உள்ளது.
முன்னதாக 2023-ஆம் ஆண்டு ஒருநாள் ஃபார்மேட்டில் நடந்த ஆசிய கோப்பையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது இந்திய அணிக்கு ரூ.1 கோடி 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்த முறை குரூப் சுற்றில் இந்திய அணி நாளை ஐக்கிய அரபு அமீரகத்தையும், வரும் 14ஆம் தேதி பாகிஸ்தானையும், 19ஆம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
















