சீனாவின் ஒரு விமான நிலையத்தில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அருணாச்சலத்தை சீனாவுக்கு சொந்தமான பகுதியாகக் காட்டும் அதன் நிலைப்பாடு மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.
என்ன நடந்தது ?
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமா வங்ஜோம் தொங்டோக் என்ற பெண், சீன விமான நிலையம் வழியாகப் பயணிக்க முயன்றபோது, அவர் பிறந்த இடம் “சீனாவுக்கு சொந்தமானது” என கூறி அவரது இந்தியப் பாஸ்போர்ட் செல்லாது என சீன அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கண்டனம்
இந்தச் சம்பவத்தை கடுமையாக கண்டித்து, இந்திய வெளியுறவு துறை அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், “அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி — இது மாற்ற முடியாத உண்மை. சீனா எவ்வாறு மறுத்தாலும் உண்மை மாறாது,” என்று தெரிவித்தார்.
மேலும், பிரேமா வங்ஜோம் சம்பவம் குறித்து சீன தரப்பிடம் வலுவாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச விமானப் பயணத்துக்கான நடைமுறைகளை மீறி நடந்த இந்த நடவடிக்கைக்கு சீன அதிகாரிகள் இதுவரை எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சீனாவில் 24 மணி நேரத்திற்குள் உள்ள பயணங்களுக்கு விசா தேவையில்லை என்ற நடைமுறையை கூட இந்தச்சம்பவத்தில் மீறப்பட்டுள்ளதாக இந்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

















