மத்திய அரசு இன்று (ஆகஸ்ட் 20) மக்களவையில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம், தீவிர குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பவர்களான பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் தங்கள் பதவியை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதுவரை, சிலர் கைது செய்யப்பட்டபின் தாமாகவே பதவி விலகி வந்தாலும், இன்னும் சிலர் சிறையில் இருந்தபடியே ஆட்சிப் பொறுப்பை வகித்து வந்துள்ளனர். உதாரணமாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த ஆண்டு மதுக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் சிறையில் இருந்தபோதும், முதல்வர் பதவியைத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய மசோதா படி, தீவிர குற்றவழக்குகள் (குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் வழக்குகள்) தொடர்பாக கைது செய்யப்பட்டால், 30 நாட்கள் சிறையில் இருந்த பின், 31வது நாளில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில், தானாகவே பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
இது கொலை, பெரிய அளவிலான ஊழல் போன்ற கடுமையான குற்றங்களை உள்ளடக்கும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளார். பின்னர், இது கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் இந்த மசோதா குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், விவகாரம் குறித்த ஆலோசனைக்காக அவர்கள் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.